வழுக்கைத் தலையின் ஆரம்ப நிலையா? அப்போ இத ட்ரை பண்ணுங்க

பூ,காய்,பழம் என மாதுளம்பழத்தின் அனைத்து நிலைகளிலும் நாம் பயன்படுத்துகிறோம். எல்லா காலங்களிலும் கிடைத்திடும் இந்தப் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியிருக்கும் மாதுளம்பழத்தை நம் அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

மாதுளம் எண்ணெய் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி மாதுளம்பழத்தை போடுங்கள் சிறிது நேரத்தில் பூச்சி அரித்த, சொத்தையான மற்றும் அழுகிய மாதுளம் வித்துக்கள் இருந்தால் அது மேலே வந்து நிற்கும். அதனை தண்ணீரோ அப்படியே கீழே கொட்டிவிடுங்கள். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும். 50 மில்லி பாதாம் எண்ணெயைக் காய்ச்சி, பாட்டிலில் உள்ள மாதுளம் முத்துக்களின் மீது சூடாக ஊற்றவும். எண்ணெய் ஆறியவுடன் பாட்டிலை நன்கு மூடி, வெயில்படாத அறையில் வைக்கவும். 10, 15 நாட்களுக்குப் பிறகு பாட்டிலில் மாதுளம் எண்ணெய் தயாராகியிருக்கும். இந்த எண்ணெயில் மற்ற எண்ணெயைப்போல் பிசுபிசுப்பு இருக்காது.

பருக்கள் : பொதுவாக, எண்ணெய்ப் பிசுக்கு சருமம் உடையவர்களும் பருக்கள் உடையவர்களும், முகத்தில் எண்ணெய் தடவக்கூடாது. ஆனால், மாதுளம் எண்ணெய், பிசுக்குத்தன்மை இல்லாத லேசான எண்ணெய் என்பதால் பயன்படுத்தலாம். பருக்கள் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் மாதுளம் எண்ணெயைத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்து, 10, 15 நிமிடங்களில் முகத்தைக் கழுவவும். இதனால் பருக்கள் தோன்றுவது மட்டுப்படுத்தப்படும்.

கூந்தல் : மாதுளம் எண்ணெயை சுடவைத்து, மிதமான சூட்டில் தலைக்குத் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கி எடுத்த டவலால் தலையைச் சுற்றி நீராவி கொடுக்கவும். அரை மணி நேரம் கழித்து டவலை எடுத்துவிட்டு, தலைக்கு குளிக்கவும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும்.

கண்கள் : மாதுளம் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்துகொண்டு அதில் பஞ்சை நனைத்து, தினசரி கண் இமைகளின் மேல் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவிவந்தால் கண்கள் பளிச்சிடும்.

க்ளன்சர் : ஒரு ஸ்பூன் மாதுளம் சாற்றுடன் கால் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் ‘பேக்’போட்டு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தொட்டு தேய்த்துக் கழுவவும்.இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் இதை, தினசரி முகத்தை சுத்தப்படுத்த க்ளென்சராகப் பயன்படுத்தலாம்.

தழும்புகள் : மாதுளம் சாறு ஒரு டீஸ்பூன், புதினா சாறு அரை டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இவற்றை பேஸ்ட் போல குழைத்து பருக் களினால் ஏற்பட்ட வடுக்களின் மேல் தினசரி ஒரு முறை தடவிவர, தழும்புகள் மறையும்.

மிருதுவான சருமம் : மாதுளம் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும். வாரம் ஒருமுறை, இந்தப் பொடியைத் தண்ணீரில் குழைத்து முகம் மட்டுமில்லாமல் உடல் முழுக்க தேய்த்துக் குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

வெடிப்புகள் : உதடு, பாதம், போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டால், மாதுளம் சாறு ஒரு ஸ்பூன், இரண்டு பாதாம், ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை, ஒரு டீஸ்பூன் கசகசா அனைத்தையும் சேர்த்து அரைத்து, தினசரி இரவு அந்த வெடிப்புகளில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிடுங்கள். இதனால் வெடிப்புகள் மறைந்து சருமம் மிருதுவாகும்.

கண் வறட்சி : நாள் முழுவதும் கணினியில் வேலைபார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சியில் இருந்து தப்பிக்க, மாதுளம் சாறு 2 ஸ்பூன், தண்ணீர் 2 ஸ்பூன் கலந்து வைத்துக்கொண்டு, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பஞ்சை அதில் நனைத்து மூடிய கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்கவும்.

வழுக்கைத்தலை : தலையில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வழுக்கையைத் தடுக்க, உலர்ந்த மாதுளம் தோல் 100 கிராம், அதிமதுரம் 50 கிராம், உலர்ந்த ஒற்றைச் செம்பருத்தி 50 கிராம்… இவை அனைத்தையும் அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வறண்ட சருமம் : மாதுளம் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ, வறண்ட சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

Add Comment

%d bloggers like this: