மாதவிலக்கின்போது ஏற்படும் வலி சாதாரணமானதுதானா?

கர்ப்ப காலத்தைப் போலத்தான் மாதவிடாய் நாட்களும். பெண்ணுக்குப் பெண் வேறுபடும். சிலருக்கு அந்த நாட்களும் வழக்கமானவையாகவே கடந்துவிடும். வேறு சிலருக்கோ அவை நரகத்துக்குச் சமமானவை. மாதவிடாய் நாட்களில் பெண்கள் அனுபவிக்கிற வலி சாதாரணமானதுதானா? விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மிதமான வலி

அனேகப் பெண்களுக்கு இந்த நாட்களில் மிதமானதொரு வலி இருக்கும். உடலுக்குள் நிகழும் வேதியியல் மாற்றங்கள் மற்றும் கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் செயல் காரணமாக ஏற்படுகிற இந்த வலியை சாதாரண வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதன் மூலமே சரி செய்து விடலாம்.

இடுப்பில் ஏற்படும் வலி

ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின் போது இடுப்புப் பகுதியைச் சுற்றிக் கடுமையான வலியை உணர்ந்தால் அது ஃபைப்ராய்டு பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஃபைப்ராய்டு பிரச்னை இருந்தால் மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு 7 நாட்கள் வரை நீடிக்கும். ரத்தப்போக்கின் அளவும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கொரு முறையும் நாப்கினை மாற்றும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதை வைத்து ஃபைப்ராய்டாக இருக்கலாமோ என சந்தேகித்து டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

கடுமையான அடிவயிற்றுவலி மற்றும் அடிமுதுகு, தொடைகளில் வலி

இந்த மூன்றுக்குமே எண்டோமெட்ரியாசிஸ் என்கிற பிரச்னை காரணமாக இருக்கலாம். வலி நிவாரண மாத்திரைகளின் மூலம் ஓரளவு வலியிலிருந்து விடுதலை பெறலாம். ஆனாலும் அடிவயிற்று வலியோ, தொடை வலியோ, அளவுக்கதிக ரத்தப்போக்கோ அந்த மாத்திரைக்குக் கட்டுப்படாது. எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பெண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

இடுப்பு வலியுடன் காய்ச்சலும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் இருந்தால் மாதவிடாய் நாட்கள் முழுவதும் கடுமையான இடுப்பு வலியும், காய்ச்சலும், கூடவே சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சலும் இருந்தால் அவை பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ் எனப்படுகிற பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இது அலட்சியப் படுத்தப்பட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் உடனே கவனிக்கப்பட வேண்டும்.மாதவிலக்கு நாட்களின் அவதிகளில் இருந்து விடுபட சிம்பிள் தீர்வுகள் சில…

* தொடர்ந்து ஒவ்வொரு மாதவிடாயின் போதும் வலியை அனுபவிக்கிறீர்களா? அடுத்தமுறை அந்த வலியின் தீவிரத்தை குறைக்க முன்கூட்டியே உடற்பயிற்சிகளை ஆரம்பித்துவிடுங்கள். உடற்பயிற்சி என்றதும் ஜிம்முக்குப் போக வேண்டும் என அவசியமில்லை. சாதாரண வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், யோகா போன்றவையே போதும்.

* வலி கடுமையாக இருக்கும்போது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது முதுகு வலியைக் குறைப்பதோடு, ரத்தப் போக்கை சீராக்கும். வெந்நீரைக் கையாளும்போது கவனம் அவசியம்.

* சிலருக்கு இரவு நேரங்களில் வலி அதிகரிக்கும். அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்துவிட்டுப் படுக்கலாம். இது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைப்பதுடன் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யும். நல்ல தூக்கத்தைத் தரும்.

* அடிவயிற்று வலி அதிகமாக இருப்பவர்கள் தமக்குத் தாமே வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு எண்ணெயை லேசாகச் சூடாக்கி மிக மென்மையாக மசாஜ் செய்துவிடுவது வலியை ஓரளவு தணிக்கும்.

* வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதில் கவனம் இருக்கட்டும். ஒவ்வொரு மாதமும் அதையே வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். அவற்றுக்கும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அளவுக்கதிகமாக வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வோருக்கு செரிமானப் பிரச்னை, வேகமான இதயத்துடிப்பு, நெஞ்சுப்பிடிப்பு, வாந்தி, பேதி போன்றவை ஏற்படலாம்.

நன்றி குங்குமம் டாக்டர்

Add Comment

%d bloggers like this: