கோதுமை மாவு நீரிழிவைத் தூண்டுகிறதா ஒர் அலசல் ?

தென்னிந்தியாவில் கோதுமை முதன்மைப் பயன்பாடு இல்லையென்றாலும், சப்பாத்தி, பூரி, புரோட்டா (மைதா) போன்ற உணவு
களுக்கு கோதுமையே அடிப்படையாக இருக்கிறது. இச்சூழலில் கோதுமை நல்லதுதானா என்று கேள்வி எழுப்புவது அவசியம் ஆகிறது.

”தென்னிந்தியாவில் விளைவிக்கப்படும் சிறுதானியங்கள் போல, வட இந்தியாவின் குளிர்பிரதேசங்களிலும், கங்கைச் சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வந்ததுதான் இந்திய கோதுமை. அரிசியைப் போலவே கோதுமையிலும் பல நூறு ரகங்கள் இருந்தன. வெப்பம், குளிர், மழையைத் தாங்கி வளரக்கூடிய தன்மை அந்த ரகங்களுக்கு இருந்தது. இந்திய கோதுமை ரகங்கள் நெட்டையாக வளரக்கூடியவை. அந்த நெட்டை ரக கோதுமைகள் சத்தான உணவுப்பொருளாக இருந்தன.

அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது நிலத்தில் உணவுப்பயிரை விளைவித்து தங்களது தேவை போக எஞ்சியதை பண்ட
மாற்றம் செய்தும், விற்பனை செய்தும் வந்தனர். என்றைக்கு உணவுப் பொருட்கள் முற்றிலும் வணிகமயமானதோ அன்றைக்குத்தான் பிரச்னைகளுக்கான தொடக்கம் உருவானது. உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கென நடத்தப்பட்ட பசுமைப்புரட்சியே இன்றைய விவசாயம் மற்றும் உணவு சார் பிரச்னைகளுக்கான அடித்தளமாக இருக்கிறது. பசுமைப்புரட்சியால் அரிசியை விடவும் கோதுமை பெருத்த பாதிப்புகளுக்கு ஆளானது.

கோதுமையின் பல நூறு ரகங்கள் அழிக்கப்பட்டு சில ரகங்களுக்குள் சுருக்கப்பட்டது. விதைப் பன்மயத்தை அழித்து விவசாயிகளிடம் இருக்கும் விதை உரிமையைப் பறிப்பதும், முதலாளிகள் விவசாயத்தை மையப்படுத்தி தங்களது சந்தையை உருவாக்கவும்தான் பசுமைப்புரட்சி நடத்தப்பட்டது. உலக பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுகிற நார்மன் போர்லாக் மெக்சிகோவில் பல ஆய்வுகளுக்குப் பின்னர் குட்டை ரக கோதுமையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சிக்கு ராக்பெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள்தான் பண உதவி புரிந்தன. இவை இரண்டும் விவசாயத்துக்கான ட்ராக்டர் மற்றும் யூரியா தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் என்பது குறிப்பிட வேண்டியது.

இந்தியாவுக்குள் குட்டை ரக கோதுமையை கொண்டு வந்து, பணத்தேவை இன்றி வாழ்ந்து கொண்டிருந்த விவசாயிகளை பகட்டான வாழ்க்கைக்குள் இழுத்து, அவர்களைக் கடனாளியாக்கி, இறுதியில் அவர்களிடம் குட்டை ரக கோதுமையை பயிர் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். இப்படியாக பரப்பப்பட்ட குட்டை ரக கோதுமையால் பாரம்பரிய ரக கோதுமைகளின் உற்பத்தி இல்லாமல் போனது. இந்திய கோதுமையைக் காட்டிலும் குட்டை ரக கோதுமைகள் மைதா மாவு எடுக்க உகந்தவை. இதன் காரணமாகவே மைதா மாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பேக்கரி சந்தையை இங்கு உருவாக்கினார்கள். மாவைப் புளிக்க வைப்பதற்கான ஈஸ்ட் முதல் பேக்கரிக்கான இயந்திரங்கள் வரையிலும் பலவற்றை விற்று கல்லா கட்டிக் கொண்டனர் என்பதிலேயே இதிலிருக்கும் வியாபார அரசியலை புரிந்து கொள்ள முடியும்.

நமது பாரம்பரிய கோதுமையில் மாவுப்பொருள், நார்ச்சத்து, நுண்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருந்தது. குட்டை ரக கோதுமை இந்தியா முழுவதும் இன்றைக்கு பணப்பயிராகத்தான் விளைவிக்கப்படுகிறது. வட இந்தியாவில் குட்டை ரக கோதுமையை விளைவிக்கிறவர்களே கூட அதை தங்களது உணவுத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை எனும்போது அது எவ்வளவு கேடானது என்பதை உணர வேண்டும்.

அந்தந்தப் பகுதியில் விளைவது அந்தந்தப் பகுதி மக்களுக்கானது என்பதுதான் இயற்கையின் நியதி. அதன் அடிப்படையில் பார்க்கும்போது கோதுமை நமக்கான உணவல்ல. அப்படி இருக்கும்போது எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட ஓர் கோதுமை ரகம் எப்படி நமக்கு பொருந்திப் போகும்? அதோடு கோதுமை மீது நிகழ்த்தப்படும் ரசாயனத் தெளிப்புகளாலும், கோதுமையிலிருந்து மைதா மாவை எடுப்பதற்காக நிகழ்த்தப்படும் பாலீஷ் மற்றும் ப்ளீச்சிங்காலும் ஏற்படும் தீய விளைவுகள் அதிகம். முதலாளிகளின் லாபவெறியால்தான் இத்தகைய சீரழிவுக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்” என்று கோதுமைக்குப் பின்னால் இருக்கும் உணவு அரசியலைப் பேசுகிறார் வானகத்தின் பொறுப்பாளர் ம.குமார்.

கோதுமையால் நீரிழிவு ஏற்படும் என்பது உண்மைதானா? மேலும் நீரிழிவுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து சித்த வர்ம மருத்துவர் பு.மா.சரவணனிடம் கேட்டோம்…

”குறிப்பிட்ட ஒரு உணவைச் சாப்பிடுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நோய் குணமாகும் என்பது மக்களிடையே பரவலாக இருக்கும் கருத்து. நமது சித்த மருத்துவ உணவுமுறைகளில் அரிசி உணவு பிரதானமாகவும், பிற தானிய உணவுகள் அவ்வப்போது சாப்பிடுவதாகவும்தான் இருந்திருக்கிறது. பண்டைய சமையல் முறைக்கும் இப்போதைய சமையல் முறைக்கும் இடையே உள்ள வேறுபாடு, உணவு உற்பத்தியில் பயன்படுத்துகிற ரசாயனங்களின் தன்மை மற்றும் சமூக வாழ்வியல் மாற்றங்கள்தான் இன்றைக்கு பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இயற்கையாக விளைவிக்கப்பட்டதை உண்டும், சமையல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியும், தேவைகளின் ஊடாக மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுமே நோயற்ற வாழ்வை சாத்தியப்படுத்தும். பசித்துப் புசித்தல், தாகமெடுத்து தண்ணீர் அருந்துதல், அளவான உழைப்பு, தேவையான அளவு தூக்கம் என இவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.

எளிதில் செரிமானமாகி சத்துகள் உடலில் சேரக்கூடிய உணவு வகைகளே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அரிசி உணவே எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும் எளிதில் சக்தி அளிக்கக்கூடியதாகவும் உள்ளது. கோதுமை உணவு என்பது பரவலாக சர்க்கரை ேநாய்க்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. உண்மையில் கோதுமை உணவு எந்த வகையிலும் சர்க்கரை அளவைக் குறைப்பதாக இல்லை. அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் இதர சத்துகள் பசியை தள்ளிப்போடுவதாக இருக்கிறதே தவிர, வேறு மிகப்பெரிய நல்ல விளைவுகளை அது ஏற்படுத்துவதில்லை. சித்த மருத்துவத்தில் கோதுமை உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் தாராளமாக பால், நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால், கோதுமைக்கு மலத்தைக் கட்டும் தன்மையுள்ளது.

இந்திய மக்களுக்கான கோதுமைத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான கோதுமை உற்பத்தி இந்தியாவில் இருந்தாலும் அரசியல் நிலைப்பாடு காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் விளைவிக்கப்படும் கோதுமை மரபணு மாற்றம் செய்யப்பட்டது. அது வெண்மையாக மைதாவுக்கு ஏற்புடையதாக இருக்கும். அந்த கோதுமையில் மிகுதியான மாவுச்சத்தைத் தவிர எதுவுமில்லை.

மரபணு மாற்றப்பட்ட காரணத்தால் அதை உட்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளை அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும். மனித உயிர்களின் செயல்பாட்டில் மாறுதலைக் கொண்டு வரும். இந்தியாவில் விளைவிக்கப்படும் கோதுமையிலுமே கூட சைபர் மெத்ரின், பைரிடான், சைக்ளோ 3 போன்ற ரசாயன உரங்கள் அதிக அளவில் தெளிக்கப்படுகின்றன. அதை உட்கொள்ளும்போது ரசாயனத்தின் எச்சங்கள் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்கிறது. மேலும் நீரிழிவு, தைராய்டு, அட்ரினல் போன்ற நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் பு.மா.சரவணன்.

உணவியல் நிபுணரான தாரிணி கிருஷ்ணனின் கருத்தோ வேறொரு கோணத்தில் இருக்கிறது…

”நீரிழிவுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவே சிறந்தது என்பதால்தான் கோதுமை பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய காய்கறிகளுடன் கூடிய உணவைச் சாப்பிட்டாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். தொடக்கத்திலிருந்து சிறுதானியங்களையும் இயற்கையான காய்கறிகளையும் உண்டு வந்த நமது உணவுப்பழக்கம் மாறியதுதான் இத்தனை உடல் நலப்பிரச்னைகளுக்கும் காரணம். கோதுமையை விட இப்போது மைதாதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடை உணவுகள் என்றாலே மைதாவைக்கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன.

சப்பாத்தி, பூரியிலும் கூட மைதாவை கலக்கிறார்கள். கோதுமையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிக அளவில் இருக்கிறது. மைதாவிலோ மாவுச்சத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. கேரளாவில் புரோட்டாவுடன் கொண்டைக்கடலையைச் சேர்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் கொண்டைக்கடலையில் இருக்கும் நார்ச்சத்துக்காக. எந்த சத்துமில்லாத மைதா பல தீய விளைவுகளை ஏற்படுத்துமே தவிர, கோதுமையால் எந்தப் பிரச்னையும் இல்லை.

கோதுமையை பயிராக வாங்கி அதை அரைத்து சலிக்காமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் கோதுமை மாவை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் பொருள் 6 மாதம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். கோதுமை மாவை பூச்சி தாக்காமலிருக்க அதில் உள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகின்றனர். இதனால் நார்ச்சத்து நமக்குக் கிடைக்காமல் போகிறது. கோதுமையில் அரிசியை விட புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

அரிசியை நாம் பாலீஷ் செய்வதால் அரிசியின் மேற்பரப்பில் இருக்கும் புரதம் நீங்கி விடுகிறது. அரிசி மாதிரிதான் கோதுமையும். அதிலும் பல அடுக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு சத்துகள் உண்டு. கோதுமை மாவு கோதுமை நிறத்திலேயே இருக்க வேண்டும். பார்க்க பளபளஎன்று வெள்ளையாக இருப்பது நல்லதல்ல. சாப்பாட்டை விட சப்பாத்தியாக சாப்பிடும்போது சாப்பிடும் அளவை கணக்கு வைத்துக் கொள்ள முடியும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட மாட்டோம். கோதுமையைச் சாப்பிடுவதில் தவறொன்றுமில்லை. அந்தந்த நிலத்தில் விளைவது அந்தந்த மக்களுக்கானது என்பதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமில்லை” என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

அமெரிக்காவை சேர்ந்த இதய நல நிபுணரான வில்லியம் டேவிஸ் என்பவர் 2011ம் ஆண்டு ‘Wheat belly’ என்கிற ஒரு நூலை எழுதினார். வெளியான ஒரே மாதத்தில் நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் முத்திரையைப் பெற்ற அந்நூலில் வில்லியம் டேவிஸ் கோதுமையின் தீய விளைவுகள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவில் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வந்த நெட்டை ரக கோதுமை இப்போது இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட குட்டை ரக கோதுமைதான் அங்கு விளைவிக்கப்படுகிறது.

அரிசிக்கு நிகரான சத்துகள் கொண்டிருந்த கோதுமை இப்போதைய மரபணு மாற்றத்தால் அரிசியை விட கேடு விளைவிக்கும் உணவாக மாறி விட்டது. இந்த கோதுமை நம் மூளையில் ஓப்பியம் எனும் போதை மருந்து ஏற்படுத்துவதற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தி பசியைத் தூண்டி விட்டு, அதிகம் உண்ண வைக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட குட்டை ரக கோதுமை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் கோதுமையை உண்ணும்போது சர்க்கரை அளவு அதிகரித்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். கோதுமையில் உள்ள க்ளூட்டன் எனும் புரதம் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படுகிற சொரியாஸிஸ் போன்ற நோய்களையும் ஏற்படுத்தவல்லது என்று கோதுமைக்கு எதிரான இவரது கருத்துகள் பரபரப்பாக பேசப்பட்டன.

 

Add Comment

%d bloggers like this: