பெண்களுக்கு மாதவிடாய் தவிர வேறெந்த காரணங்களால் உதிரப்போக்கு உண்டாகும்?

பெண்களுக்கு இருக்கின்ற மிக முக்கிமான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய்.பருவம் எய்த வயதிலிருந்து மாதவிடாய் நிற்கும் வயதான 45 வயது முதல் 50 வயது வரையில் மாதாமாதம் உதிரப்போக்கு ஏற்படும்.

இதன் போது பெண்கள் பல்வேறு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். உதிரப்போக்கு பெண்களுக்கு அவசியமானது என்றாலும் கூட அதனால் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது தான் உண்மை.

மாதவிடாய் தவிர்த்து வேறு என்ன காரணங்களால் உதிரப்போக்கு ஏற்படும் என்று தெரியுமா? உள்ளுறுப்புகளில் ஏற்ப்பட்ட மாற்றங்களாக இருக்கலாம், அல்லது நம்முடைய வாழ்க்கைமுறையில் ஏதேனும் மாற்றமாக இருக்கலாம்,ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதனை கண்டறிந்து தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமானதாகும். இப்போது மாதவிடாய் தவிர வேறு என்னென்ன காரணங்களால் உதிரப்போக்கு ஏற்படும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பம் : ஆச்சரியமாக இருக்கிறதா! பெரும்பாலும் மாதவிடாய் நின்றால் தான் கர்ப்பமாக இருக்குமோ என்ற கேள்வி எழும். ஆனால் சிலருக்கு குழந்தை உருவாகி 12 வாரங்கள் வரையிலும் கூட உதிரப்போக்கு ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் பெரக்னென்ஸி அசோசியேசன் அறிவித்திருக்கும் அறிக்கையின் படி 20 சதவீத பெண்களுக்கு இப்படியான உதிரப்போக்கு ஏற்படுகிறதாம். வழக்கமாக உங்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை விட கர்ப்பத்தின் போது ஏற்படும் உதிரப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 12 வாரங்களைக் கடந்தும் உதிரப்போக்கு அல்லது வயிற்று வலி தொடர்ந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.

மருந்து : அதிகமாக அல்லது நீண்ட நாட்கள் மாத்திரைகளை உட்கொள்கிறவராக இருந்தால் அவர்களுக்கு இப்படியான உதிரப்போக்கு ஏற்படும். நம் உடலில் இருக்கிற ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்திடும் மாத்திரைகளை உட்கொள்கிறவராக இருந்தால் கூட உதிரப்போக்கு ஏற்படும். வழக்கமாக உதிரப்போக்கு ஏற்ப்பட்டாலே அது மாதவிடாய் என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு மாதவிடாய்க்கும் இன்னொரு மாதவிடாய்க்கும் குறைந்த நாட்களே இடைவேளியிருப்பது, வழக்கத்திற்கு மாறான அதிக உதிரப்போக்கு ஆகியவை மாதவிடாய் தவிர வேறு ஏதேனும் காரணங்களை கொண்டிருக்கலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, அதிலிருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோகெஸ்டின் ஆகியவற்றால் நம் உடலில் உள்ள ஹார்மோன் அளவு மாறுபடும். இதனால் மாதவிடாய் தேதிகளில் மாற்றங்கள் உண்டாகும். வழக்கத்திற்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்ப்பட்டாலோ அல்லது இடைவேளி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.

பாலியல் நோய் : பாலியல் தொற்று நோய் ஏற்பட்டால் கூட உங்களுக்கு இப்படியான உதிரப்போக்கு ஏற்படக்கூடும். ஆரம்பத்தில் உங்களால் இதனை கண்டு பிடிக்க முடியாது.ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் அவ்வளவாக உங்களுக்கு வெளியில் தெரியாது. வழக்கமான மாதவிடாய் போன்றே உங்களுக்குத் தோன்றும். குறிப்பாக உறவில் ஈடுபட்டவுடன் உதிரப்போக்கு ஏற்பட்டால் இதனை கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை கவனிக்காமல் விட்டால் பிறப்புறப்பில் தொற்று ஏற்ப்பட்டு அது பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்திடும்.

கர்ப்பத்தடை : நீங்கள் கர்ப்பத்தடை சாதனம் பயன்படுத்துபவராக இருந்தால் கூட முறையற்ற வகையில் உதிரப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காப்பர் டி பயன்படுத்துகிறவர்களில் 25 சதவீதத்தினருக்கு இது போல உதிரப்போக்கு ஏற்ப்படுகிறது. பெரும்பாலும் அவர்களுக்கு மாதவிடாய் அதிக உதிரப்போக்குடன் நீண்ட நாட்கள் நீடிக்கச்செய்திடும். காப்பர் டி போன்றே இன்னொரு கர்ப்பத்தடை சாதனமான மிரீனா பயன்படுத்த துவங்கிய முதல் ஆறு மாதத்திற்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்படக்கூடும். கர்ப்பத்தடை சாதனம் பயன்படுத்துவதால் ஏற்படும் உதிரப்போக்கு வழக்கமாக உங்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை விட அதிகமாகவும் நீண்ட நாட்கள் கொண்டதாகவும் இருக்கும்.

தைராய்டு : யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மாதவிடாய் என்பதே பெண்களின் ஹார்மோன் பொறுத்து தான் அமைகிறது. ஹார்மோன் சுரப்பியான தைராய்டில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் கூட மாதவிடாயில் மாற்றங்கள் நிகழும். தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சுரந்தால் உங்களுடைய மாதவிடாயில் மாற்றம் உண்டாகும். இதனை தைராய்டு டெஸ்ட் எடுத்துப் பார்ப்பதன் மூலமாக கண்டு பிடிக்கலாம்.

தாம்பத்தியம் : சில நேரங்களில் உடலுறவு கொள்வதாலும் உதிரப்போக்கு ஏற்ப்படுவதற்கு வாய்ப்புகளுண்டு. மிகவும் கடுமையாக செய்வதாலோ அல்லது பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இல்லாத போது உடலுறவு கொண்டாலும் உதிரப்போக்கு ஏற்ப்பட்ட வாய்ப்புகளுண்டு.

தொற்று நோய் : கர்ப்பப்பையில் ஏற்படும் தொற்று நோய், கர்பப்பையில் வருகின்ற கட்டி ஆகியவை கூட அதிகமான உதிரப்போக்கிற்கு காரணமாக இருக்கலாம். இதைத் தவிர ஹார்மோன் மாற்றங்கள் கூட அதிக உதிரப்போக்கிற்கு முக்கிய காரணமாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாக உதிரப்போக்கு வருவதாக நீங்கள் நினைத்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

புற்றுநோய் : உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியதாய் கூட இது அமைந்திடும். இது கர்பப்பை வாய் அல்லது கர்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். குறைவான இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டால் அதுவும் அதிக உதிரப்போக்குடன் வந்தால் உடனடியாக மருந்தவரை சந்திப்பது நலம். புற்றுநோய் தீவிரமடைவதற்கு முன்னதாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் மட்டுமே நாம் நோயின் தீவிரத்திலிருந்து தப்பிக்க முடியும். ஆக, மாதவிடாயில் மாற்றங்கள் உண்டானால் வழக்கமாக வருவது தானே என்று அசட்டையாக இருக்காமல் என்ன காரணம் என்று கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெற்றிடுங்கள்.

Add Comment

%d bloggers like this: